TELEVISION
“குழந்தை உள்ளவர்களுக்கே அந்த அருமை புரியும்”.. மீம் கிரியேட்டர்களை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் பட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குழந்தை பிறப்பு சம்பந்தமாக வெங்கடேஷ் பட் பேசியது நெட்டிசன்களால் கேலிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மீம் கிரியேட்டர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று அறியப்படும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் சீசன் 3 கலகலப்பாக நடந்து வருகிறது. சென்ற வார எபிசோட்டில் நடுவர் வெங்கடேஷ் பட் “ ஐ வி எஃப்-க்காக (செயற்கை கருவூட்டல்) சென்ற ஒரு பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்ததால் தான் தனக்கு குழந்தை பிறந்தது” என தன்னிடம் அந்த பெண் கூறியதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் வெங்கடேஷ் பட் சொன்ன அந்த வரிகளை கொண்டு பங்கமாய் கலாய்த்து வந்தனர். “அப்படின்னா “எதுவும்” பண்ண தேவையில்லையா?” என கேலி செய்து வந்தனர். இது தொடர்பாக பல மீம்களும் வைரல் ஆனது.
இந்நிலையில் இது குறித்து வெங்கடேஷ் பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிலடி ஒன்றை தந்துள்ளார். அதில் “குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே அது எவ்வளவு பெரிய பாக்கியம் என தெரியும். அப்படி என்றால் குழந்தை இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் நெட்டிசன்களிடம் கோரிக்கை வைப்பது போல் “எனக்காக அல்ல, உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்கிறேன். தயவு செய்து என்னை கிண்டல் செய்வதாக எண்ணி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்” என கூறியுள்ளார்.
இணையத்தில் சிலர் வெங்கடேஷ் பட்டிற்கு ஆதரவாக “வெங்கடேஷ் பட் சொன்னது செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக சென்ற பெண். அதில் உறவு வைத்துக் கொள்ளத் தேவை இல்லை. குழந்தை நல்லபடியாக பிறப்பதற்கு Stress இருக்கக்கூடாது. அந்த பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து விட்டு stress இல்லாமல் சிகிச்சைக்கு சென்றிருப்பார். அதனால் தான் அப்படி சொல்லிருப்பார்” என பதிலடி கொடுத்தும் வருகின்றனர்.