TELEVISION
பிராங்க் என்ற பெயரில் மக்களை துன்புறுத்திய யூட்யூப் சேன்னல் மீது வழக்கு…
பிராங்க் என்ற பெயரில் மக்களை மன ரீதியாக துன்புறுத்திய கோவையைச் சேர்ந்த யூட்யூப் சேன்னல் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
சமூக வலைத்தளப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து பிராங்க் ஷோக்களிந் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. எதில் எதில் எல்லாம் பிராங்க் செய்யலாம் என்ற வரைமுறையே இல்லாமல் பிராங்க் ஷோ நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கோவையைச் சேர்ந்த ஒரு யூட்யூப் சேன்னல் மீது பிராங்க் ஷோ என்ற பெயரில் பொது மக்களை மன ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சிலரால் ஆரம்பிக்கப்பட்ட “கோவை 360 டிகிரி” என்ற யூட்யூப் சேன்னல் பின்னால் மிகவும் பிரபலமானது. இதில் பல பிராங்க் ஷோக்கள் நடத்தப்படுகிறது. இளம்பெண்கள் பார்க்கில் அமர்ந்திருக்கும்போது அருகில் அமர்ந்து அவர்களிடம் எடக்கு மடக்காக பேசுவது. என்ன என்று கேட்டால் காதில் இருக்கும் ஹெட்ஃபோனை காட்டி “நான் எனது நண்பனுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிறேன்” என கூறுவது. இது போல் தான் இவர்களின் பிராங்க் ஷோ இருக்கும்.
அதிக ஃபாலோயர்ஸை கொண்ட இந்த யூட்யூப் சேன்னல் தான் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளது. கோவை சைபர் கிரைம் போலீஸார், பொது மக்களின் சம்மதம் இன்றி அவர்களை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தும்படி நடந்துகொண்டதாக “கோவை 360 டிகிரி” யூட்யூப் சேன்னல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பிராங்க் என்ற பெயரில் பொது மக்களை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.