HOLLYWOOD
“தோர்” திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றம்; உற்சாகத்தில் ரசிகர்கள்
மார்வெல் திரைப்பட வரிசையில் வெளியாக இருக்கும் “தோர் லவ் அண்ட் தண்டர்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது.
மார்வெல் திரைப்பட வரிசையில் தற்போது பல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்; மல்டி வெர்ஸ் ஆஃப் மேட்ன்ஸ்” திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
இந்நிலையில் சமீபத்தில் “தோர்; லவ் அண்ட் தண்டர்” என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்தது. மார்வல் சூப்பர் ஹீரோக்களில் ஐயர்ன் மேன், ஸ்பைடர்மேன், ஹல்க் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் கொண்ட கதாப்பாத்திரம் என்றால் தோர் கதாப்பாத்திரத்தை கூறலாம்.
ஆஸ்கார்டு என்ற வேற்று உலகத்தைச் சேர்ந்த தோரின் சுத்தில் அக்கதாப்பாத்திரத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனை தோரால் மட்டுமே தூக்க முடியும். எனினும் “அவெஞ்சர்ஸ்; என்ட் கேம்” திரைப்படத்தில் கேப்டன் அமெரிக்காவின் கைகளுக்கு தாராளமாக அந்த சுத்தில் சென்று சேரும்.
மேலும் அத்திரைப்படத்தில் தோர் மிகவும் குண்டாக இருப்பார். இந்நிலையில் தனது உடலை மீண்டும் சிக்கென ஆக்கி “தோர்; லவ் அண்ட் தண்டர்” திரைப்படத்தில் காட்சி தருகிறார். இத்திரைப்படத்தில் தோரின் முன்னாள் ஜேன் இடம்பெறுவதால் காதல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேன் கதாப்பாத்திரமும் தோருக்கு இணையான சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் தோராக கிரிஸ் ஹெம்ஸ்வொர்த்தும், அவரின் முன்னாள் காதலி ஜேன் ஆக நடாலி போர்ட்மேன்னும் வழக்கம்போல் தோன்றுகின்றனர். எனினும் ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் கிரிஸ்டியன் பேல் இத்திரைப்படத்தில் கோர் தி காட் பட்சர் என்ற கதாப்பாத்திரத்தில் சூப்பர் வில்லனாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முந்தைய நாளான ஜூலை 7 ஆம் தேதியே இத்திரைப்படம் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Get ready for the ultimate ‘THORSDAY’! 🤩
Marvel Studios’ #ThorLoveAndThunder ❤️+⚡ arrives in cinemas in India a day before, on the 7th of JULY. pic.twitter.com/59CnZnEpQr
— Marvel India (@Marvel_India) June 3, 2022