HOLLYWOOD
“அவதார் 2” படத்தை முன்னிட்டு மீண்டும் வெளியாகிறது “அவதார்”…
“அவதார் 2” திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் “அவதார்” திரைப்படத்தின் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு உலகளவில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்றத் திரைப்படம் “அவதார்”. மிகவும் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை அசர வைத்தது. ரசிகர்களுக்கு மாபெறும் விருந்தாக இத்திரைப்படம் அமைந்தது.
இத்திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன் “டைட்டானிக்”, “டெர்மினேட்டர்”, “ஏலியன்ஸ்” என பல பிரம்மாண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். இவரது திரைப்படத்திற்கென்றே உலகம் முழுவதிலும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். எதை தொட்டாலும் அதை பிரம்மாண்டமாக உருவாக்குவது இவரது பாணி.
“அவதார்” திரைப்படம் வெளியான சில ஆண்டுகளிலேயே “அவதார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை படக்குழு தொடங்கியது. அதன் பின் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் “அவதார் 2” திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தான் “அவதார் 2” திரைப்படம் குறித்த அப்டேட் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலரும் வெளிவந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது படக்குழு ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது “அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி “அவதார்” திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது. இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
