HOLLYWOOD
“வயிற்றில் குழந்தை இருக்கிறது. ஆனாலும் அப்படி நடித்தேன்”.. ஹாலிவுட் பட அனுபவத்தை பகிர்ந்த ஆலியா பட்
ஆலியா பட் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் நடித்த ஹாலிவுட் திரைப்படத்தின் படக்குழு தன்னை எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழும் ஆலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்தார் ஆலியா பட்.
இந்நிலையில் தற்போது “ஹார்ட் ஆஃப் ஸ்டோன்” என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆலியா பட். இத்திரைப்படத்தில் “வொண்டர் உமன்” புகழ் கேல் கடோத்தும் ஆலியாவுடன் இணைந்து நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியானது. இத்திரைப்படத்தில் ஆலியா பட் ஆக்சன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் கர்ப்பமான நிலையில் ஆக்சன் காட்சிகளில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பிரபல இதழுக்கு பேட்டியளித்தார் ஆலியா பட். அதில் “இது நான் நடிக்கும் முதல் ஹாலிவுட் திரைப்படம். அதே போல் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிப்பதும் இதுவே முதல் முறை. ஆனால் நான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது கடினமாக இருக்குமோ என நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் என்னை கனிவோடு கவனித்துக்கொண்டனர். அவர்கள் என்னை எவ்வளவு கனிவோடு நடத்தினார்கள் என்பதை என் வாழ்நாளில் நான் மறக்கவே மாட்டேன்” என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
ஆலியா பட் நடிப்பில் வருகிற 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் “டார்லிங்க்ஸ்” என்ற திரைப்படம் வெளிவர உள்ளது. ஆலியா பட்டும் அவரது கணவர் ரன்பீர் கபூரும் முதன் முதலாக இணைந்து நடித்த “பிரம்மாஸ்த்ரா” திரைப்படமும் வெளிவர தயாராக இருக்கிறது. இத்திரைப்படம் தமிழிலும் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.