REVIEW
தரமான Feel Good திரைப்படம்.. “திருச்சிற்றம்பலம்”.. A Short Review..
தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
தனுஷ் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் தந்தை பிரகாஷ் ராஜ்ஜிற்கும் தனுஷிற்கும் ஏக பொருத்தமாக இருக்கிறது. ஒரு புறம் சிறு வயதில் இருந்தே தோழியாக பழகி வரும் நித்யா மேனனின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக தனுஷ் இருக்கிறார்.
இவ்வாறு செல்கையில் தனுஷின் வாழ்க்கையில் இரண்டு பெண்கள் நுழைகிறார்கள். தனுஷிற்கும் அந்த இரு பெண்களுக்கும் இடையே நடப்பது என்ன? அதே போல் தனது நெடுநாள் தோழியான நித்யா மேனன் உடன் இருக்க இந்த மூவரில் யார் தனுஷின் காதலை ஏற்றுக்கொள்கிறார்கள்? என்பதே “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் கதை.
தனுஷ் நடிப்பை பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. இந்த திரைப்படத்திலும் சிறந்த நடிப்பையே தந்திருக்கிறார். ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் ஒரு பக்கத்து வீட்டு பையன் போல் தென்படுகிறார் தனுஷ். அதே போல் தனுஷிற்கு தோழியாக வரும் நித்யா மேனன் தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டு போகிறார்.
சிடுசிடுவென இருக்கும் தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனுஷின் தாத்தாவாக வரும் பாரதி ராஜாவின் கதாப்பாத்திரம் ஒரு உயிர் நண்பனின் கதாப்பாத்திரம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் தனது நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதாநாயகிகளான பிரியா பவானி ஷங்கரும், ராஷி கண்ணாவும் தங்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே மரண ஹிட் ஆகியிருந்த நிலையில் அப்பாடல்கள் திரையில் தோன்றும்போது மிகவும் Fresh ஆக இருக்கிறது. காட்சிகளுக்கேற்ப பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறார் அனிருத். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு திரைப்படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்கிறது. பிரசன்னாவின் எடிட்டிங் பக்கா.
தனுஷ் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்து தரமான ஒரு Feel Good திரைப்படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர். திரைக்கதையில் சற்று தொய்வு தென்பட்டாலும் அது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது. காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மொத்தத்தில் பல ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் வெளியான குடும்பத்துடன் காணவேண்டிய ஒரு Romantic Comedy திரைப்படமாக “திருச்சிற்றம்பலம்” மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
