REVIEW
இது ஒரு புத்தம் புரிய “டைரி”.. A Short Review
அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி, பவித்ரா, ஆடுகளம் கிஷோர், சாரா ஆகியோரின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “டைரி” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
சப் இன்ஸ்பக்டர் பயிற்சியின் இறுதி தருணத்தில் இருக்கும் அருள்நிதி, இதுவரை முடிக்கப்படாத ஊட்டியில் நடந்த ஒரு 16 வருட பழைய கேஸை எடுத்து விசாரிக்கிறார். விசாரணையில் பல மர்மமான விஷயங்கள் அவருக்கு தெரியவருகின்றது. அதே நேரத்தில் ஊட்டியின் மலைப்பாதையில் 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் கடக்கக்கூடிய வாகனங்கள் மர்மமான முறையில் விபத்தை சந்திக்கின்றன.
அருள்நிதி அந்த முடிக்கப்படாத 16 வருட பழைய கேஸுக்கான விடையை கண்டுபிடித்தாரா? அந்த கேஸுக்கும் அந்த 13 ஆவது கொண்டை ஊசி மர்ம விபத்துகளுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே “டைரி” திரைப்படத்தின் கதை.
திரில்லர் வகையராவில் ஒரு புதுவிதமான கதையை தேர்ந்தெடுத்து அதனை சிறப்பாகவும் படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன். படத்தின் முதல் பாதி சற்று தொய்வாக இருப்பினும் இரண்டாம் பாதியில் பல டிவிஸ்டுகளால் படம் ஏற்றம் பெறுகிறது.
அருள்நிதியின் நடிப்பு பக்கா. ஒவ்வொரு காட்சியிலும் அந்த காட்சிக்கு ஏற்ற முக பாவனைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் நடித்த பவித்ரா, சாரா, ஆடுகளம் கிஷோர் ஆகிய பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறார்கள். ரான் எத்தன் யோகனின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் அப்பாடல் திரையில் வரும் இடம் பார்வையாளர்களை “உச்” கொட்டத்தான் வைக்கிறது.
அரவிந்த் சிங்கின் கேமரா படத்திற்கு பெரிய பலம். இரவு நேர காட்சிகளில் மிரட்டி எடுத்திருக்கிறார். ராஜா சேதுபதியின் எடிட்டிங் சிறப்பு. படத்தின் பின்னணி இசை படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. மொத்தத்தில் ஆங்காங்கே சில தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதனை எல்லாம் மறக்கடித்துவிட்டு டிவிஸ்ட்டுகளால் டாப் கியர் ஏற்றி பார்வையாளர்களை அசரடித்துள்ளார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.