REVIEW
பார்வையாளர்களை கொத்தி தள்ளிய “கோப்ரா”.. A Short Review
சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள “கோப்ரா” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
கணிதத்தில் புகுந்து விளையாடும் விக்ரம் பணத்திற்கு உலக பணக்காரர்கள் பலரை கொலை செய்கிறார். அதுவும் கணிதம் மூலம் புதுவிதமாக கொலை செய்கிறார். இந்த கொலைகளை யார் செய்கிறார் என கண்டுபிடிக்க இன்டர்போல் அதிகாரியாக இர்ஃபான் பதான் வருகிறார். ஒரு புறம் ஒரு ஹேக்கர் விக்ரமை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிடுகிறார். விக்ரம் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? அந்த ஹேக்கர் யார்? என்பது தான் “கோப்ரா” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
சீயான் விக்ரம் வெறித்தனமாக நடித்திருக்கிறார். குறிப்பாக கணிதம் மூலம் கொல்லும் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார். பல கெட் அப்களில் வரும் விக்ரம் அந்தந்த கெட் அப்பிற்கு ஏற்றவாறு நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டியின் நடிப்பு ஓரளவுக்கு பரவாயில்லை. மிர்னாலினி ரவி தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இன்டர்போல் அதிகாரியாக வரும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தனக்கு கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். வில்லனாக வரும் ரோஷன் மேத்யூவின் நடிப்பு ஓகே ரகம் தான்.
மேலும் இத்திரைப்படத்தில் நடித்த ரோபோ ஷங்கர், கே எஸ் ரவிக்குமார், மியா ஜார்ஜ், ஆனந்த் ராஜ் போன்ற பலரும் அவரவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
“கோப்ரா” திரைப்படத்தின் கதை தனித்துவமான கதையாக இருந்தாலும் திரைக்கதையில் சொதப்பி எடுத்திருக்கிறார்கள். கணிதம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேற லெவலில் இருக்கிறது. ஆனால் படத்தின் முதல் பாதி தொய்வாக இருக்கிறது. இரண்டாம் பாதி ஓரளவு படத்தை கொண்டுசெல்கிறது.
ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் தரம் என்றாலும் அப்பாடல்கள் தேவையில்லாத இடங்களில் சொருகப்பட்டிருப்பது பார்வையாளர்களை “உச்” கொட்ட வைக்கிறது. புவன் சீனிவாசன் மற்றும் ஹரீஸ் கிருஷ்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவு மிரட்டல். எடிட்டிங் பக்கா.
மொத்தத்தில் திரைக்கதையை சற்று மெருகேற்றியிருந்தால் “கோப்ரா”வின் விஷத்தில் இருந்து பார்வையாளர்கள் ஓரளவுக்காவது தப்பித்திருக்கலாம்.