REVIEW
ரசிகர்களின் சங்கை கடித்த “லைகர்”.. A Short Review
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் என பலருடைய நடிப்பில் பேன் இந்தியா திரைப்படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் “லைகர்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
மும்பையில் தனது அம்மாவுடன் வசித்து வரும் விஜய் தேவரகொண்டா டீ கடை நடத்தி வருகிறார். அவருக்கோ MMA குத்து சண்டையில் சேர்ந்து பெரிய சாம்பியன் ஆக வேண்டும் என்று ஆசை. அதன்படி ஒரு சண்டைப்பயிற்சி கூடத்தில் சேருகிறார் விஜய் தேவரகொண்டா. அங்கே தன்னுடைய திறமையை காட்டி கோச்சை வியப்பில் ஆழ்த்துகிறார்.
இதனிடையே கதாநாயகி அனன்யா பாண்டே அவருடன் காதலில் விழுகிறார். இந்த காதல் தன்னுடைய மகனின் கனவை சிதைத்துவிடும் என நினைக்கும் ரம்யா கிருஷ்ணன் அவர்களின் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் விஜய் தேவரகொண்டாவிற்கு திக்கு வாய் என்ற உண்மையை அறிந்த பின் அனன்யா பாண்டே அவரிடம் இருந்து விலகி விடுகிறார்.
அதன் பின் தான் நினைத்தபடி விஜய் தேவரகொண்டா சாம்பியன் ஆனாரா? அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவை ஏற்றுக்கொண்டாரா? என்பதே “லைகர்” திரைப்படத்தின் கதை.
இந்திய சினிமாவுக்கே பழகிப்போன கதை என்பதால் கொஞ்சம் மெருகேற்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடலாம் என இயக்குனர் பூரி ஜெகன்நாத் நினைத்திருப்பார் போல. ஆனால் திரைக்கதை பெரிய சொதப்பலாக அமைந்திருக்கிறது.
விஜய் தேவரகொண்டா தன்னுடைய சிக்ஸ் பேக்ட்டுடன் வலம் வருகிறார். சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் திரைக்கதை சொதப்பியதால் அனைத்தும் சொதப்பியுள்ளது. இது மட்டுமல்லாமல் தேவையே இல்லாமல் அடிக்கடி வரும் பாடல்கள் படத்திற்கு சம்பந்தமே இல்லாததால் பார்வையாளர்களை “உச்” கொட்ட வைக்கிறது.
படத்தின் பிளஸ் விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவு மட்டுமே. படத்தொகுப்பாளர் ஜூனைட் தனக்கான வேலையை செய்திருக்கிறார். ஆனால் படம் பார்வையாளர்களுக்கு பெரும் சோதனையாக அமைந்திருக்கிறது.
ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பரவாயில்லை. மைக் டைசனை கூப்பிட்டு வந்து காமெடி செய்திருக்கிறார்கள். அனன்யா பாண்டே கிளாமரில் தெறிக்கவிடுகிறார். மற்றபடி அவருக்கு அவ்வளவாக ஸ்கோப் இல்லை.
மொத்தத்தில் சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த “லைகர்” பார்வையாளர்களின் சங்கை கடித்து வைத்திருக்கிறது.