REVIEW
அண்ணாச்சியின் “தி லெஜண்ட்” எப்படி இருக்கு..? A Short review
“தி லெஜண்ட்” சரவணன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள “தி லெஜண்ட்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
வேர்ல்டு லெவல் விஞ்ஞானியாக திகழும் சரவணன், தனது அறிவெல்லாம் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அதனை தொடர்ந்து தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார்.
அங்கே தனது கிராம மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு திட்டத்தை துவங்குகிறார். அதன் குறுக்காக சுமன் வருகிறார். சரவணனின் திட்டம் நிறைவேறியதா? சரவணன் சுமனை வென்றாரா? என்பதே படத்தின் கதை.
சரவணன் அறிமுகமாகிய திரைப்படம் என்பதாலோ என்னவோ அவர் நடிப்பில் சற்று தொய்வு தெரிகிறது. ஆக்சன் காட்சிகளிலும் , நடனத்திலும் புயலாக கலக்கும் சரவணன் சென்டிமென்ட் காட்சிகளில் தடுமாறுகிறார்.
கதாநாயகிகளாக வரும் ஊர்வசி ரதுலா, கீதிகா திவாரி ஆகியோர் அழகு பதுமையாக வந்து பார்வையாளர்களை வசியப்படுத்துகிறார்கள். அதை தாண்டி அவர்களுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
விவேக், யோகி பாபு ஆகியோரின் காமெடிகள் ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகி உள்ளதே தவிர படத்திற்கு பலமாக இல்லை. பிரபு, நாசர், விஜயகுமார் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் சுமன், வழக்கம் போல ஒரு கம்மெர்சியல் பட வில்லனாக திகழ்கிறார்.
படத்தின் முதல் பிளஸ் என்றால் ஹாரீஸ் ஜெயராஜ் இசையை சொல்லலாம். ஆனால் 6 பாடல்கள் படத்திற்கு தேவையற்றது என்றே தோன்ற வைக்கிறது. அதை தாண்டி அடுத்த பிளஸ்கள் சண்டைக் காட்சிகளும் ஒளிப்பதிவும். ஆர் வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
ஆனால் இந்த குறைந்தளவு பிளஸ்கள் எல்லாம் திரைக்கத்தையின் தொய்வில் மைனஸாகி போகிறது. ஜேடி-ஜெர்ரி கூட்டணி திரைக்கதையை இன்னும் சிறப்பாக எழுதியிருந்தால் படம் ஓரளவு தப்பித்திருக்கும்.
மொத்தத்தில் “தி லெஜண்ட்” சரவணா ரசிகர்களுக்கு ஒரு பெருத்த ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.