REVIEW
சாணி காயிதம் எப்படி இருக்கு?.. A short review..
அருண் மாதஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான “சாணி காயிதம்” திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கிறது.
பெண் போலீஸாக பணி புரிபவள் பொன்னி. ஆனால் எளிய குடும்பம். கணவன் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு வாழ்கிறாள். அவளின் கணவன் மாரி பணிபுரியும் இடத்தில் ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுறான். மேலும் அவனின் மனைவி பொன்னியை பற்றி அவதூறாக பேசிவிடுகிறார்கள். ஆத்திரத்தில் மாரி மில் ஓனரின் முகத்தில் காரி துப்பி விடுகிறான்.
அவமானம் தாங்க முடியாத மில் ஓனர் பொன்னியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவளது கணவன் மற்றும் மகளை வீட்டிற்குள் பூட்டிவைத்து எரித்து விடுகிறார்கள். சட்டத்தின் உதவியை நாடி போகும் பொன்னியை சட்டமும் ஏமாற்றிவிட, தனது அண்ணன் சங்கையா துணையுடன் தனக்கு குற்றம் இழைத்தவர்களை எப்படி பழிக்கு பழி வாங்குகிறாள் என்பதே கதை.
அருண் மாதேஸ்வரனின் முந்தைய திரைப்படமான “ராக்கி” போலவே இத்திரைப்படத்திலும் வன்முறை காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. இவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் “குவெண்டின் டரன்டினோ” படங்களின் தீவிர ரசிகராக இருக்கலாமோ? என்று பேசப்படுகிறது. படம் முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது. பாதிக்கப்பட்ட பொன்னியாக நடித்த கீர்த்தி சுரேஷ் ஒவ்வொருவரையும் பழி வாங்கும்போதும் கண்களில் காளி உருவம் புரிகிறார். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கழுத்து அறுப்பது, நெஞ்சை குத்தி பிளப்பது என ஆக்கிரோஷங்களால் குடிக்கொண்டிருப்பதை திரையில் யதார்த்தமாக காட்டுகிறார்.
செல்வராகவன் ஏற்றிருக்கும் சங்கையா கதாப்பாத்திரம் படம் முழுவதும் தங்கை பொன்னி மேல் வைத்திருக்கும் பாசத்துக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கும் கதாப்பாத்திரம். பொன்னிக்கு நிகராக தனது ஆக்ரோஷத்தை படம் முழுவதும் வெளிபடுத்தியிருக்கிறார். “ஏற்கனவே கத்தி, துப்பாக்கிலாம் வாங்கி வச்சிருக்கேன்மா, வாம்மா போய் அவிங்கள கொன்னுட்டு வரலாம்” என அசால்டாக வசனம் பேசி பொன்னியை அழைத்து செல்லும் காட்சியில் மிரள வைக்கிறார்.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவனை தாண்டி படத்தின் பலம் என்பது ஒளிப்பதிவு தான். ஒரு “Dark” மூவிக்கான Mood-ஐ பார்வையாளர்களுக்கு தனது ஒளிப்பதிவால் கிடத்தி விடுகிறார் யாமினி யாகினமூர்த்தி. படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்றாலும் பின்னணி இசையில் சாம். சி. எஸ். மிரளவைக்கிறார். நாகூரான் படத்தொகுப்பு அபாரம். துணை நடிகர்களாக நடித்திருக்கும் “ஆடுகளம்” முருகதாஸ், கர்ணா ரவி முதலிய பலர் தங்களது கதாப்பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு பின்னடைவாக அமைந்திருப்பது திரைக்கதை தான். நாவல் படிப்பது போன்று பகுதி பகுதியாக காட்சிகளை பிரித்திருப்பது நல்ல யுக்தி என்றாலும் பல இடங்களில் தொய்வு தெரிகிறது. வன்முறை காட்சிகளை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும் “Slasher” வகையறா திரைப்படங்களை ரசிப்பவர்களுக்கு “சாணி காயிதம்” ஒரு பெரிய ட்ரீட்.
