HOLLYWOOD
“இந்தியாவிற்கு நன்றி”… நெகிழ்ச்சியில் பதிவிட்ட அமெரிக்க சூப்பர் ஹீரோ
மார்வெல் சூப்பர் ஹீரோ ஜெரெமி ரென்னர் தனது இந்திய பயணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெரெமி ரென்னர். இவர் “தி ஹர்ட் லாக்கர்”, “அமெரிக்கன் ஹஸ்ஸில்”, “மிஷன் இம்பாஸிபிள்” “அர்ரைவல்” போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மார்வெல் திரைப்படங்களில் “ஹாக் ஐ” என்ற சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். “தோர்”, “அவெஞ்சர்ஸ்”, “அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்“, “கேப்டன் அமெரிக்கா”, “அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்”, “பிளாக் விடோவ்” போன்ற பல மார்வெல் திரைப்படங்களில் ஹாக் ஐ சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஜெரெமி சமீப நாட்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட ஜெரெமி இந்தியாவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் என்னும் நகரில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்திய பயணத்தை முடித்து விட்டு ஜெரெமி மீண்டும் தன் நாட்டிற்கு செல்கிறார். இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டிரக்கின் முன் உட்கார்ந்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “எங்களுடன் மிகவும் கடின உழைப்பில் ஈடுபட்ட இந்தியாவில் இருந்த எங்கள் படக்குழுவிற்கு மிகவும் நன்றி” என நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.
ஜெரெமி ரென்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் சீரீஸ் படப்பிடிப்பிற்காக இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அத்திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அனில் கபூர் நடித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram