REVIEW
போங்கு ஆட்டம் ஆடிய குருதி ஆட்டம்… A Short Review
8 தோட்டாக்கள் என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய “குருதி ஆட்டம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
மதுரை இளைஞனாக வரும் அதர்வா, ஒரு கபடி வீரர். இவரின் “பாசப்பட்டாளம்” கபடி குழுவினருக்கும் எதிரணியான “வெட்டுப்புலி” அணியினருக்கும் கபடிப் போட்டி நடைபெறுகிறது. “வெட்டுப்புலி” அணியைச் சேர்ந்த கண்ணா ரவி மதுரையையே கலக்கிக் கொண்டிருக்கும் தாதா ராதிகாவின் மகன்.
இந்த போட்டியில் “வெட்டுப்புலி” அணி தோல்வியைத் தழுவுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் மோதல் வருகிறது. இதன் காரணமாக அதர்வா கைதாக, அதர்வாவிற்கு உதவி செய்கிறார் எதிரணியைச் சேர்ந்த கண்ணா ரவி.
இது அந்த அணியைச் சேர்ந்த ஒருவருக்கு பிடிக்காமல் போக இருவரையும் கொல்ல கூலிப்படையை அனுப்புகிறார். அப்போது கண்ணா ரவி கொல்லப்படுகிறார். இது இப்படி இருக்க ஒரு பக்கம் அதர்வா பணிபுரிந்து வரும் மருத்துவமனையில் ஒரு குழந்தை வைரஸ் காய்ச்சலால் அவதிபடுகிறது. அக்குழந்தையின் மேல் அதர்வா தனி கவனம் செலுத்துகிறார். இறுதியில் தன் மகனை கொன்றவர்களை ராதிகா பழிவாங்கினாரா? அதர்வா அந்த குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.
அதர்வா மதுரை இளைஞனாக துறுதுறுவென திகழ்கிறார். மதுரை பாஷை பேசுகையில் ஓரளவு சறுக்கினாலும் தனது பெர்ஃபார்மென்ஸால் கிளாப்ஸ்களை அள்ளுகிறார். அதே போல் அதர்வாவின் நண்பாராக வரும் கண்ணா ரவி, அவரின் தாயான ராதிகா, மற்றும் பலரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். கதாநாயகி பிரியா பவானி ஷங்கர் கதாப்பாத்திரம் ஆழமாக இல்லை. அழகு பதுமையாக வந்து செல்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அவ்வளவாக எடுபடவில்லை. எடிட்டிங் ஓகே. ஒளிப்பதிவு திரைப்படத்தின் பிளஸ். ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் ஆழம் இல்லாததால் பார்வையாளர்களை ரசிக்க வைக்க மறந்துவிடுகிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். இன்னும் கொஞ்சம் கதையிலும் திரைக்கதையிலும் முயற்சி செய்திருந்தால் ஒரு பக்கா கம்மெர்சியல் திரைப்படமாக அமைந்திருக்கும். மொத்தத்தில் “குருதி ஆட்டம்” ஒரு போங்கு ஆட்டம்.