TELEVISION
தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சீரீயல் நடிகை.. நெட்டிசன்களை விளாசிய கனிஷ்கா
தன்னை தானே திருமணம் செய்துகொண்டதற்கு எழுந்த கண்டனங்களை தொடர்ந்து தற்போது நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கனிஷ்கா.
கலாச்சாரம் என்பது காலத்திற்கு ஏற்றார் போல் மாறிக்கொண்டிருப்பது என்பது நிதர்சனம். திருமணம், காதல் போன்ற உறவில் தற்போது பல நவீன கால உரையாடல்கள் நடந்து வருகின்றது. “ஆணும் பெண்ணும் தான் காதலிக்க வேண்டும், அதை தாண்டி ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் காதலிக்ககூடாது” என்ற கருத்து காலத்துக்கு ஒவ்வாத கருத்தாகவும் தனித மனித சுதந்திரத்திற்கு இழுக்கு ஏற்படும்படியான கருத்தாகவும் தற்போது மாறியுள்ளது.
ஓரின காதல் என்ற விஷயம் மனித நாகரீகத்தில் உலகம் தோன்றியதில் இருந்து எப்போதும் இருப்பது தான் என பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிற்காலத்தில் புகுத்தப்பட்ட கலாச்சார விஷயங்கள் அதனை இழிவாக பார்த்தது. ஆனால் இப்போது அதனை தாண்டிய உரையாடல்கள் நடந்து வருகிறது. அதுவும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஓரின காதலுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் சில நாட்களுக்கு முன்பு குஜராத்தை சேர்ந்த சீரீயல் நடிகையான கனிஷ்கா சோனி “நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன்” என அறிவித்திருந்தார். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தது பலரையும் திடுக்கிட வைத்தது. மேலும் பலரும் இவர் இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்தன. இந்த நிலையில் கனிஷ்கா தற்போது இந்த கண்டனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் அவர் “நான் இந்திய கலாச்சாரத்தை இழிவுபடுத்தவில்லை. திருமணம் என்பது பாலியல் உறவு மட்டுமே கிடையாது. திருமணம் என்பது அதையும் தாண்டி அன்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை பற்றியது. ஆனால் நான் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன். ஆதலால் இப்போது தனியாக வாழ்ந்து வருகிறேன். எனது வாழ்க்கையில் நான் கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.
