CINEMA
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விமல்.. புது படம் புது அப்டேட்..
விமல் புதிதாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது.
“கில்லி” “கிரீடம்” “குருவி” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த விமல், “பசங்க” “களவாணி” ஆகிய திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார்.
அதன் பின் அவருக்கு தொடர்ந்து சிறிய கால இடைவெளியில் பல படங்கள் வெளிவந்தன. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது இயல்பான கதாப்பாத்திரங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவரது சினிமா கேரியர் சரிவைக் கண்டது. அவரது திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கூட வெற்றியடையாமல் போனது.
இவ்வாறு சரிந்து கிடந்த விமல், சமீபத்தில் வெளியான “விலங்கு” என்ற வெப் சீரிஸின் மூலம் மாஸ் “come back” கொடுத்தார். “விலங்கு” வெப் சீரிஸ் மிகப் பெரும் ஆதரவை பெற்றுக் கொடுத்தது. அது வரை காணாத விமலின் மறுபக்கத்தை விலங்கு வெப் சீரீஸில் வெளிபடுத்தி அசரவைத்தார். “நம்ம விமலா இது?” என ரசிகர்கள் வாயில் கை வைத்து “ஆ” வென ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
விமலுக்கு மிகவும் அழகு சேர்ப்பதே அவரின் தாடி தான் என அவரது ரசிகர்கள் கூறுவார்கள். விலங்கு வெப் சீரீஸில் அதே தாடியுடன் போலிஸ் கெட் அப்பில் நடித்து கலக்கியிருப்பார். வெப் சீரிஸின் திரைக்கதையும் அடுத்த நிமிடத்தில் என்ன நடக்கும் என விறுவிறுப்போடும் திருப்பங்களோடும் அமைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் “விலங்கு” வெப் சீரீஸை ஏகபோகமாக கொண்டாடித் தள்ளினர். பல வருடங்கள் கழித்து தனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என நடிகர் விமல் பல பேட்டிகளில் நெகிழ்ச்சியோடு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் “குலசாமி” என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்த சூடே இன்னும் தனியாத நிலையில் தற்போது விமல் நடிக்கும் “தெய்வ மச்சான்” என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பல படங்களில் விமல் நடித்து வருவதால் “இனி விமலுக்கு ஏறுமுகம் தான்” என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
