CINEMA
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள உள்ள டாப் நடிகர்கள்…
“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தமிழின் டாப் நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவல் 5 பாகங்களை கொண்டது. “இவ்வளவு பெரிய நாவலை வெப் சீரீஸாக தான் எடுக்க முடியும், திரைப்படமாக எடுக்க முடியாது” என பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் ஒரு பேட்டியில் பேசிய போது “பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய பகுதிகளையே படமாக்கியுள்ளோம்” என கூறினார். இதனை வைத்து பார்க்கும்போது நாவலை அப்படியே எடுக்காமல் அந்த சாராம்சத்தை மட்டும் எடுத்து இத்திரைப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளதாக தெரிகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்” இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்தான ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவந்துள்ளது. நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
