CINEMA
“என் படம் வெளியாகுறதே ரொம்ப கஷ்டம்” … கமல் ஓபன் டாக்
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல் ஹாசன் தனது மனம் திறந்து பேசியுள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளது. கமல் ஹாசனின் திரை வாழ்க்கையிலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அறியப்படுகிறது.
இதனிடையே பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. அதில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், அன்புச் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய கமல் ஹாசன், “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான பல பேருக்கு நன்றி சொன்னார். உதயநிதி ஸ்டாலின் பல திரைப்படங்களை வெளியிட வேண்டும் என வாழ்த்தினார்.
அனிருத் குறித்து பேசும் போது, “அனிருத்தை யாராவது அடையாளம் தெரியாதவர் பார்த்தால் காலேஜுக்கு போலயா என கேட்பார்கள். ஆனால் பேசினால் அமிதாப் பச்சன் குரல் போல் இருக்கும்” என கூறினார்.
அதனை தொடர்ந்து “கடந்த 10 வருடங்களில் என்னுடைய திரைப்படம் எளிதில் வெளியானதே இல்லை. எளிதில் வெளியிட விட மாட்டார்கள். “விக்ரம்” திரைப்படம் தான் எளிதில் வெளியாகி உள்ளது” என கூறியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.