CINEMA
விக்ரம் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சீயான் விக்ரம் உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி
சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர். இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமல்ஹாசனுக்கு பின் பல வேடங்களில் நடிக்கும் திறமை பொருந்திய நடிகர் என்றும் கூறலாம்.
சிறு வேடம் என்றாலும் அந்த வேடத்திற்காக இவர் செய்யும் மெனக்கடல்கள் ரசிகர்களை “ஓ” போட வைக்கும். இவர் நடிப்பில் தற்போது “கோப்ரா”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன.
இன்று “பொன்னியின் செல்வன்” டீசர் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது விக்ரம் திடீரென உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு லேசான நெஞ்சு வலி என தெரிய வருகிறது. இது குறித்து விக்ரமின் மேனேஜர் டிவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, விக்ரமிற்கு லேசான நெஞ்சு வலி தானே தவிர ஹார்ட் அட்டாக் கிடையாது. முதலில் இது போன்ற பொய்யான தகவல்களை பகிர்வதை நிறுத்துங்கள். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்றே அவர் வீட்டிற்கு சென்று விடுவார்” என கூறியுள்ளார்.
சீயான் விக்ரம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார். அவர் ஆதித்த கரிகாலனாக தோன்றிய போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியானது.
சீயான் விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்க உள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அத்திரைப்படம் 18 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதையம்சமாக அமைய உள்ளது எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.