CINEMA
மறுபடியும் வாய்ஸ் ஓவரா? GVM க்கு கும்புடு போடும் நெட்டிசன்கள்..
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள “வெந்து தணிந்தது காடு” முதல் பாகத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, ராதிகா சரத்குமார், சித்தி இட்னானி ஆகியோரின் நடிப்பில் வருகிற 15 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.
இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருவதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிம்பு, ஏ ஆர் ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வழக்கம்போல் கௌதம் மேனன் படங்களில் உள்ள வாய்ஸ் ஓவருடன் தான் டிரைலரே தொடங்குகிறது. “இதனால் ரசிகர்கள் டிரைலரிலேயே வாய்ஸ் ஓவரை ஆரம்பிச்சிட்டாரே” என புலம்பி வருகின்றனர்.
திரைப்படத்தின் டிரைலர் மிகவும் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். குறிப்பாக ஏ ஆர் ரஹ்மானின் இசை உலகத்தரமாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
அதே போல் இந்த டிரைலரில் “Part 1 Kindling” என்பதை தெரிவித்திருக்கிறார்கள். இதில் இருந்து இத்திரைப்படம் இரண்டு பாகங்களை உடைய திரைப்படம் என்பது தெரிய வருகிறது.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிடுகிறார்.
இத்திரைப்படத்தின் பாடல்களும் நேற்று வெளியானது. இதில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அப்பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாகவே அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த பாடல்களையும் கவிஞர் தாமரையே எழுதியிருக்கிறார்.
ஏற்கனவே “மறக்குமா நெஞ்சம்”, “காலத்துக்கும் நீ வேணும்” போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.