CINEMA
“ஹிந்தியை எதிர்க்கிறீர்கள், ஆனால் ஹிந்தி படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள்?”… உதயநிதியின் பதில் என்ன தெரியுமா?
அமீர் கான் நடித்த “லால் சிங் சத்தா” திரைப்படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஹிந்தி எதிர்ப்பை குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு உதயநிதி என்ன பதில் கூறினார் தெரியுமா?
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற 11 ஆம் தேதி வெளிவருகிறது. ஹாலிவுட்டில் வெளியான “ஃபார்ரஸ்ட் கம்ப்” என்ற திரைப்படத்தின் தழுவலான இத்திரைப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
அமீர் கான், கிரண் ராவ், ஜோதி தேஷ்பாண்டே, அஜித் அந்தேரே, ராதிகா சௌத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின், அமீர் கான் ஆகியோர் பங்குபெற்றனர்.
அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு பத்திரிக்கையாளர் “நமது மாநிலம் ஹிந்தி எதிர்ப்பு பேசுகிற மாநிலம். ஹிந்திக்காரர்களை பானி பூரி விற்கிறவர்கள் என கேலி செய்கிறோம். இத்திரைப்படத்தின் டிரைலரில் பானி பூரி சம்பந்தமாக ஒரு காட்சி வருகிறது. முதல் முறை ஒரு ஹிந்தி திரைப்படத்தை வெளியிடுகிறீர்கள். உங்களுக்கு வரப்போகும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி “மொழி திணிப்பை தான் நாங்கள் (திமுக) எதிர்க்கிறோமே தவிர ஹிந்தியை யாரும் கற்றுக்கொள்ளக் கூடாது என நாங்கள் கூறியதில்லை.” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “அமீர் கான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடைய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்” எனவும் கூறினார்.
