CINEMA
அமலா பாலுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர் கைது..
அமலா பாலுக்கு மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமலா பால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது பவ்நிந்தர் சிங் என்ற ஃபைனான்சியருக்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவ்நிந்தர் சிங் அமலா பாலை திருமணம் செய்துகொள்வதாக நம்பிக்கை அளித்துள்ளார்.
ஆனால் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் பவ்நிந்தர் சிங், தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டுவதாகவும் தன்னிடம் பண மோசடி செய்துள்ளதாகவும் அமலா பால் கடந்த 26 ஆம் தேதி விழுப்புரம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். மேலும் அமலா பால்-ஐ பவ்நிந்தர் சிங் தொழில்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் நடிகை அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் பவ்நிந்தர் சிங் மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முதலியார் சாவடியில் வைத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பவ்நிந்தர் சிங் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அமலா பால் மற்றும் பவ்நிந்தர் சிங் ஆகியோர் முதலியார் சாவடியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
“மைனா” திரைப்படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டவர் அமலா பால். அதன் பின் அவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார்.
அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.