CINEMA
இனி சூர்யாவை கையிலயே பிடிக்க முடியாது.. ஒரே பிசி தான்…
இனி சூர்யாவை கையிலேயே பிடிக்க முடியாது என்பது போல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு பிரபல பாலிவுட் இயக்குனருடன் சூர்யா கைக்கோர்க்க உள்ளராம். யார் தெரியுமா?
தமிழ்நாடு மட்டுமல்லாமல் சூர்யாவை இந்தியாவே திரும்பி பார்க்கிறது. ஆம்! சமீபத்தில் வெளிவந்த “சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்கள் சூர்யாவின் லெவலை எங்கோ கொண்டு சென்றிருக்கிறது. மேலும் சூர்யாவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் “வாடி வாசல்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா “சிறுத்தை” சிவாவுடன் கைக்கோர்க்கப்போகிறார் எனவும் தகவல் வருகிறது.
இந்நிலையில் சூர்யா நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஃபருக் கபிர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழில் தான் உருவாக உள்ளது எனவும் இது முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஃபருக் கபிர் இயக்கி சமீபத்தில் வெளிவந்த “குதா கபிஸ்” மற்றும் அதன் இரண்டாம் பாகமான “குதா கபிஸ்” சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படங்களை தொடர்ந்து ஃபருக் கபிர் சூர்யாவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா இதற்கு முன் “ரக்த சரித்ரா” என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கினார். எனினும் அதன் பின் ஹிந்தி திரைப்படங்களில் சூர்யா நடிக்கவில்லை. தற்போது சூர்யா தயாரிப்பில் அக்சய் குமார் நடித்து வரும் “சூரரை போற்று” ரீமேக்கில் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளது கூடுதல் தகவல்.