CINEMA
“ஆஸ்காருக்கு நன்றி”.. சூர்யாவின் நெகிழ்ச்சி பதிவு
ஆஸ்கார் அகாடமி உறுப்பினருக்கான அழைப்பிதழை பெற்றதை தொடர்ந்து நடிகர் சூர்யா நன்றி தெரிவிக்கும் விதமாக நெகிழ்ச்சியோடு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா இதற்கு முன் பல ஹிட் படங்களை அளித்திருந்தாலும் “ஜெய் பீம்” திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. மேலும் அத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றது.
அதாவது “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் திரைப்படத்தில் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்ப்பட்டது.
அதே போல் சர்வதேச அளவில் போஸ்டான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்கார் அகாடமியில் இருந்து சூர்யாவுக்கு உறுப்பினருக்கான அழைப்பு வந்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “எனக்கு அழைப்பு விடுத்ததற்கு அகாடமிக்கு நன்றி. இதை நான் பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னை வாழ்த்தியவர்களுக்கு எனது இதயம் கனிந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
Thank you @TheAcademy for the invitation, which I humbly accept. My heartfelt thanks to all those who wished me, will always strive to make you all proud!! 🙏🏽 https://t.co/eyEK9hQxhF
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022
நடிகர் சூர்யா சமீபத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. எனினும் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
“ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தின் வரவேற்பை பார்த்து குஷியான தயாரிப்பாளர் கமல் ஹாசன், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்த சம்பவமும் நடந்தது.
இந்நிலையில் சூர்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆஸ்கார் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையவுள்ள முதல் தமிழர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் சூர்யா.