CINEMA
சூர்யாவை வெறியோடு முட்ட வந்த மாடு… வெளியானது “வாடிவாசல்” கிளிம்ஸ்
“வாடிவாசல்” திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
வெற்றி மாறன் தற்போது “விடுதலை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதனை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து “வாடி வாசல்” என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இத்திரைப்படத்தின் அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளிவந்திருந்தாலும் இதனிடையே “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெற்றி மாறன் பிசியாகிவிட்டார்.
சில மாதங்களுக்கு முன் சென்னையில் “வாடி வாசல்” திரைப்படத்திற்கான பயிற்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி படப்பிடிப்பு தற்போது கிளிம்ப்ஸாக வெளிவர உள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று சூர்யாவின் 47 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ஒரு வீடியோவை வெளிட்டுள்ளது. அதில் இது டிரைலர் இல்லை எனவும் சூர்யா மாடு பிடி வீரர்களிடம் இருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடித்த காட்சிகள் இவை எனவும் ஒரு அறிவிப்போடு இந்த வீடியோ வெளிவந்துள்ளது.
இதில் சூர்யா மிரண்டு வரும் மாட்டை பிடிப்பதற்காக வீரர்களுடன் தயாராக இருக்கிறார். மாடு பலரையும் முட்ட வருகிறது. அதே போல் சூர்யாவையும் மாடு முட்ட வருகிறது. இவ்வாறு இந்த வீடியோ அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெற்றி மாறனின் சமீப காலத் திரைப்படங்கள் எல்லாம் நாவலை தழுவியே எடுக்கப்படுகிறது. “அசுரன்” திரைப்படம் பூமணி எழுதிய “வெக்கை” நாவலை தழுவி எடுக்கப்பட்டது. அதே போல் “விடுதலை” திரைப்படமும் ஜெயமோகனின் “துணைவன்” நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சி. சு. செல்லப்பா எழுதிய “வாடி வாசல்” என்ற நாவலை தழுவி தான் சூர்யா நடிக்க உள்ள திரைப்படமும் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
