CINEMA
பாலா படத்தில் சூர்யா இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்கப் போகிறாராம்?
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா இந்த கேரக்டரில் தான் நடிக்கிறாராம்…
பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 41 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் வெளியீட்டு போஸ்டர் நேற்று பாலா பிறந்த நாளை முன்னிட்டு வெளிவந்தது. இத்திரைப்படத்திற்கு “வணங்கான்” என பெயர் வைத்துள்ளனர்.
இதில் சூர்யாவுடன் கிரீத்தி ஷெட்டி நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் முதன் முதலில் நேரடியாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சூர்யா இத்திரைப்படத்தில் மீனவனாக நடிக்கிறாராம்.
“வணங்கான்” திரைப்படத்தின் போஸ்டரில் டெரர் லுக்கில் இருக்கும் சூர்யாவை பார்க்கும்போது அவர் மீனவனாக தான் நடிக்கிறார் என்று வியூகிக்க முடிகிறதாம்.
பாலா மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் மக்களின் கதையை அடிப்படையாக வைத்து தான் கதைகளை அமைப்பார். “பிதாமகன்” திரைப்படத்தில் பிணம் எரிக்கும் கதாப்பாத்திரம், பரதேசியில் அடிமைக் கூலிகள், “தாரை தப்பட்டை” திரைப்படத்தில் கரக்காட்டம் ஆடுபவர்கள், “நான் கடவுள்” திரைப்படத்தில் பிச்சை எடுப்பவர்கள் என அவரது திரைப்படங்களில் எளிய மக்களின் கதாப்பாத்திரங்களே தென்படுவர்.
இந்நிலையில் “வணங்கான்” திரைப்படத்தில் சூர்யா மீனவனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதிலும் ஒரு எளிய மீனவனின் வாழ்க்கையை இயக்குனர் பாலா படம் பிடித்து காட்டப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. “வணங்கான்” திரைப்படம் தெலுங்கில் “அச்சலுடு” என்ற பெயரில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
