CINEMA
என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்… “விருமன்” விழாவில் சினேகன்
“விருமன்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாடலாசிரியர் சினேகன் கார்த்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஏன் தெரியுமா?
“விருமன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 3 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா, சூரி என பலரும் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் “கெத்துல” என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன் “பாடலாசிரியர்களையே அழைக்காமல் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள்” என “விருமன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை குறித்து பேசினார். சினேகனின் இந்த பேச்சு சர்ச்சையாக இணையத்தில் பரவியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற “விருமன்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சினேகன் மேடையில் பேசியபோது “நான் முதலில் சாரி கேட்டுக்கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் விருமன் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து ஒரு சின்ன விஷயத்தை பகிர்ந்துகொண்டேன். ஆனால் அது இவ்வளவு பெரிய விஷயமாக மீடியாவால் ஆக்கப்பட்டுவிட்டது” என கூறினார்.
மேலும் பேசிய சினேகன் “மதுரையில் நடைபெற்ற விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பாடலாசிரியரை அழைக்க தவறியது வருத்தமாக இருந்தது. பாடலாசிரியர்கள் பத்து படத்திற்கு பாட்டு எழுதினால் அதில் இரண்டு படங்கள் தான் அங்கீகாரம் தருகிற திரைப்படமாக இருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நான் விருமன் திரைப்படத்தை நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என கூறினார்.
“இவ்வாறு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பாடலாசிரியர்களை அழைக்காதது பாடலாசிரியர்கள் மீதுள்ள மரியாதை குறைந்து வருகிறதோ என்ற வருத்தத்தால் அப்படி கூறினேன். ஆனால் நான் பேசியது வழக்கம் போல் பெரிதாக்கப்பட்டு விட்டது” எனவும் கூறினார்.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயிண்மென்ட் சார்பாக சூர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளத குறிப்பிடத்தக்கது.
