CINEMA
பிரபல பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரை உலகம்
தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் பம்பா பாக்யா என்கிற பாக்யராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
“சிம்டாக்காரன்”, “புள்ளினங்காள்”, “பொன்னி நதி” ஆகிய பாடல்களின் மூலம் தனது காந்த குரலால் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் பம்பா பாக்யா. இவரது உண்மையான பெயர் பாக்யராஜ்.
இவர் சென்னை பாடி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 49 என கூறப்படுகிறது.
ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பம்பா பாக்யா தவறிவிட்டார் என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பம்பா பாக்யா என்கிற பாக்யராஜ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பாடிய “புள்ளினங்காள்” பாடல் பலரையும் ரசிக்க வைத்தது. தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை ஆட்கொண்டவர் பம்பா பாக்யா என்றால் அது மிகையாகாது.
சமீபத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி”பாடலின் தொடக்க வரியை பம்பா பாக்யா பாடியிருந்தார். “சர்வம் தாள மயம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “டிங்கு டாங்கு” என்ற பாடலை பாடகர் ஆண்டனி தாசனுடன் இணைந்து பம்பா பாக்யா பாடியிருப்பார்.
அதே போல் “உணர்வு” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “விசில் போடு” என்ற பாடலையும் பாடகர் நகுல் அப்யங்கருடன் இணைந்து பம்பா பாக்யா பாடியிருப்பார். இவ்வாறு தமிழில் பல குறிப்பிடத்தக்க பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த பம்பா பாக்யா தற்போது உயிரிழந்துள்ள செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
