CINEMA
சல்மான் கான் இனி துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம்.. மும்பை கமிஷனர் அனுமதி
சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து இனிமேல் அவர் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என மும்பை போலீஸார் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சல்மான் கானின் தந்தை சலீம் கான் காலை நடை பயிற்சி மேற்கொள்ள புறப்படும்போது அவருக்கு வந்திருந்த ஒரு கொலை மிரட்டல் கடிதத்தை கண்டுகொண்டார். அந்த கொலை மிரட்டல் கடிதம் லாரன்ஸ் பிஸ்னாய் கும்பலால் அனுப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சல்மான் கானின் மான் வேட்டை வழக்கு நடந்து கொண்டிருந்த போது லாரன்ஸ் பின்சாய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மான் பின்சாய் இனத்தினரின் புனித விலங்காக அறியப்படுகிறது. பின்சாய் இனத்தை சேர்ந்த லாரன்ஸ் பின்சாயின் கும்பல் சில மாதங்களுக்கு முன்பு தான் பஞ்சாப்பை சேர்ந்த பிரபல பாடகரும் அரசியல்வாதியுமான மூஸ்வாலாவை சுட்டுக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லாரன்ஸ் பின்சாய்யை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த கொலை மிரட்டல்களை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் சல்மான் கான் மும்பை போலீஸ் கமிஷனரிடம் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் உரிமத்தை தனக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இக்கோரிகையை தொடர்ந்து தற்போது மும்பை போலீஸார் சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் உரிமத்தை வழங்கியுள்ளது.
இதற்கு முன் மான் வேட்டை சம்பவத்திற்கு பின் சல்மான் கானுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் துப்பாக்கி உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.