CINEMA
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் ஒரு சர்க்கஸ்.. சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்…
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் ஒரு சர்க்கஸ் என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர்.
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் உலகளவில் பல அங்கீகாரத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக நடத்தப்படும் “ஹாலிவுட் கிரிடிக் அசோஷியேசன் மிட் சீசன்” விருது விழாவில் ரன்னர் அப் ஆக வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது அவரிடம் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஒரு சர்க்கஸ் போல் இருந்தது எனக்கு. நான் தவறாக கூறவில்லை. அந்த திரைப்படத்தில் அந்த குழந்தையை ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நீரில் இருந்து காப்பாற்றும்போது ஒரு ஜெமினி சர்க்கஸ் போல் நான் உணர்ந்தேன். இதற்கு முன் அது மாதிரியான ஒன்றை நான் ஜெமினி சர்க்கஸில் தான் பார்த்திருக்கிறேன்” என கூறினார்.
