CINEMA
“ரஜினி திரைப்படங்களில் பெண்ணடிமைத் தனம்”.. ஆர். ஜே. பாலாஜி சர்ச்சை பேச்சு
ரஜினி திரைப்படங்களில் பெண்களை குறித்து தவறான பார்வையில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆர். ஜே. பாலாஜி கூறியது சர்ச்சையாகி உள்ளது.
ஆர். ஜே. பாலாஜியின் குரல் தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான குரல் என்றாலும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து ஒரு நடிகராக பரவலாக அறியப்பட்டார்.
ஐ பி எல் போட்டிகளில் இவரது கிரிக்கெட் கமென்ட்ரிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. “நானும் ரவுடி தான்” திரைப்படத்தை தொடர்ந்து “எல் கே ஜி” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். “Political satire” வகையரா திரைப்படமான “எல் கே ஜி” ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதனை தொடர்ந்து “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். அத்திரைப்படமும் கலக்கலான வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படங்களை தொடர்ந்து ஆர். ஜே. பாலாஜி “வீட்ல விஷேசம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஊர்வசி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
“வீட்ல விசேஷம்” திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்றது.
அப்போது அங்கே மாணவர்களிடம் பேசிய ஆர். ஜே. பாலாஜி “நான் பல வருடங்கள் மீடியாவில் இருக்கிறேன். ஒரு பெண் மிக உயர்ந்த பதவியில் இருந்தால் அவருக்கு கீழ் வேலை பார்க்கிற ஆண் ‘நான் ஏன் ஒரு பொம்பள சொல்றத செய்யனும்’ என்ற மனநிலையோடு இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். ஆனால் அவரது மன்னன் திரைப்படத்தில் வேலைக்கு போகிற பெண் (விஜய சாந்தி) தப்பான பெண் எனவும், அம்மாவுக்கு காஃபி போட்டு தரும் குஷ்பு நல்ல பெண் என காட்சிப் படுத்தியிருப்பார்கள். வேலைக்கு போகிற பெண்கள் என்றாலே கெட்டவர்கள் என சினிமாக்களில் காட்டுகிறார்கள். இது தவறான விஷயம்” என கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.