CINEMA
ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் கொளுந்து விட்டு எரிந்த தீ.. ஒருவர் உயிரிழப்பு
ரன்பீர் கபூர் திரைப்படத்தின் படப்பிடிப்பு செட்டில் திடீரென தீ பிடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்.
ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் இடம்பெரும் காட்சிக்காக மும்பை நகரில் செட் போடப்பட்டது.
இந்நிலையில் செட்டில் லைட்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்துள்ளது. பதறியடித்து ஓடிய படக்குழுவினர் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணி நேரப் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் மற்றொருவர் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதனால் தீ பிடித்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்து வரும் புதிய திரைப்படத்தை லவ் ரஞ்சன் என்ற பிரபல பாலிவுட் இயக்குனர் தயாரித்து இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் நடிகராக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த 22 ஆம் தேதி “ஷம்ஷேரா” என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவமனையில் பரிசோதனை செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
ரன்பீர் கபூர் நடிப்பில் “பிரம்மாஸ்த்ரா” முதல் பாகம் வருகிற செம்ப்டம்பர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. “ஷம்ஷேரா” திரைப்படத்தை போலவே இத்திரைப்படமும் தமிழில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
