CINEMA
“47 Years of Rajinism”… கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர்
ரஜினிகாந்த் நடிக்க வந்து இன்றுடன் 47 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் உச்சத்தை தொடலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். சாதாரண பஸ் கண்டெக்டராக இருந்து இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தவர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என பல இயக்குனர்களிடம் பணியாற்றிய ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் டாப் மோஸ்ட் ஹீரோவாக உயர்ந்தார்.
மேலும் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். ஷங்கர், மணி ரத்னம் போன்ற பல பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றிய ரஜினிகாந்த் தற்போது இளம் தலைமுறை இயக்குனர்களிடம் பணியாற்றி வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை அவரது புகழ் மங்கவே இல்லை. இப்போதும் அவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானாலும் திருவிழா கோலம் காணும். அந்த அளவுக்கு 2K கிட்களின் மனதையும் கொள்ளைகொண்ட நடிகர் என்றாலும் மிகையாகாது.
ஆன்மீகத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர் ரஜினிகாந்த். தொடக்கத்தில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளிடம் பற்றுக்கொண்ட இவர் அதன் பின் மஹா அவதார் பாபாவின் மீது பற்றுக்கொள்ள தொடங்கினார். மேலும் பல வருடங்களாக இமயமலைக்கு அடிக்கடி பயணம் செய்து வருகிறார். தீவிர ஆன்மீகமும் தொழில் மீது கொண்ட பக்தியும் ரஜினிகாந்த்தை உச்சத்திற்கு கொண்டுசென்றது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து இன்றுடன் 47 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் ரஜினிகாந்த். தற்போது அதன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.