CINEMA
கோவை சரளாவின் மறுபக்கம்? பிரபு சாலமன் படத்தின் நியூ லுக்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்தின் நியூ லுக் வெளிவந்துள்ளது.
பிரபு சாலமன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர். அவர் இயக்கிய “லாடம்”, ‘லீ” போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அதன் பின் அவர் இயக்கிய” மைனா”, “கும்கி”, ‘கயல்” ஆகிய திரைப்படங்கள் அவரை உச்சிக்கு கொண்டு சென்றது.
அதனை தொடர்ந்து வெளிவந்த “தொடரி”, “காடன்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.
அப்படத்திற்கு “செம்பி” என பெயர் வைத்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கோவை சரளா புது விதமான லுக்கில் தென் படுகிறார். எப்போதும் நகைச்சுவை வேடத்தில் கலக்கும் கோவை சரளா, இத்திரைப்படத்தில் சீரியஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என தெரியவருகிறது.
மற்றொரு போஸ்டரில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஒரு சிறு வயது பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது போன்று தோன்றுகிறார். பார்க்க ஆசிரியர் போல் இருக்கிறார். ஒரு வேளை பள்ளி குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பாரோ என தோன்றுகிறது
“என்ன சொல்லப் போகிறாய்” திரைப்படத்தில் க்யூட்டாக சாக்லேட் பாய் ஆக வலம் வந்த இவர் தற்போது பிரபு சாலமன் திரைப்படத்தில் நடிப்பது மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இத்திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்ட் டைரக்டராக விஜய் தென்னரசு பணியாற்றியுள்ளார்.
இத்திரைப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர். ரவீந்திரன் மற்றும் ரேயா, அஜ்மல் கான் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. பிரபு சாலமன் திரைப்படங்களில் எளிய மக்களின் காதல், சோகம் என அனைத்தும் கலந்திருக்கும். இத்திரைப்படமும் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.