CINEMA
சூர்யா பட நடிகர் காலமானார்.. சோகத்தில் திரை உலகினர்
சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்படத்தில் நடித்த ‘பூ’ ராமு காலமானார்.
“பூ” திரைப்படத்தில் அறிமுகமானதால் இவருக்கு ‘பூ’ ராமு என பெயர் வந்தது. “பூ” திரைப்படத்தை தொடர்ந்து “நீர் பறவை”, “தங்க மீன்கள்”, “பரியேறும் பெருமாள்”, “சூரரை போற்று”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“கர்ணன்” திரைப்படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்திருப்பார். மிகவும் யதார்த்தமான ஒரு தந்தையை வெளிப்படுத்தி இருப்பார். மிகவும் உணர்ச்சிப் பொங்கும் விதமாக சிறப்பாக நடித்திருப்பார். குறிப்பாக கிளைமேக்சில் தனுஷிடம் வாளை கொடுக்கும் காட்சியில் நம்மை மிரள வைத்திருப்பார்.
“பரியேறும் பெருமாள்” திரைப்படத்தில் கல்லூரி முதல்வராக நடித்திருப்பார். “என்னோட அப்பா செருப்பு தைக்கிறவர். அவரோட மகன் நான் இப்போ உனக்கு பிரின்சிபல்” என்று அவர் பேசும் வசனங்களை யாரும் மறந்திருக்க முடியாது.
“சூரரை போற்று” திரைப்படத்தில் சூர்யாவிற்கு தந்தையாக நடித்திருப்பார். படத்தின் தொடக்கத்தில் சூர்யாவிற்கும் அவருக்கும் நடக்கும் வாக்குவாத காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ‘பூ’ ராமுவிற்கு திடீரென்று நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இதனால் திரை உலகம் சோகத்தில் மூழ்கியது. ‘பூ’ ராமுவின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
‘பூ’ ராமு சினிமா நடிகர் மட்டுமல்லாது ஒரு நாடக கலைஞரும் கூட. மேலும் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது கூடுதல் தகவல். பல மேடைகளில் சமூகத்தில் பாதிப்படைந்தவர்கள் பக்கம் நின்று பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.