CINEMA
“படம் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி மேக்கிங்”.. பார்த்திபன் சொன்ன சுவாரசிய தகவல்
“இரவின் நிழல்” திரைப்படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ஒரு சுவாரசியமான செய்தியை பகிர்ந்துள்ளார்.
“இரவின் நிழல்” திரைப்படம் வருகிற 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் பார்த்திபன், ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா சாகா, பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை பார்த்திபனே இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
“இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் Non linear Single shot திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்திற்காக பார்த்திபன் தீயாக புரோமோஷன் வேலைகளில் இறங்கி உள்ளார். இத்திரைப்படம் குறித்து அதிகம் பேட்டி காண்கிறார். சென்ற வாரம் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புரோமோஷனுக்காக கலந்து கொண்டார் பார்த்திபன்.
அப்போது புதுமையான விதத்தில் ஒரு வாழை இலையில் “இரவின் நிழல்” என எழுதி கொண்டு வந்தார். கூடவே ஒரு சாப்பாட்டு கேரியரையும் கொண்டு வந்தார். அதாவது “இரவின் நிழல்” திரைப்படத்தை வாழை இலையில் சாப்பாடு போல் பரிமாறப்போகிறோம் என்ற வகையில் உணர்த்துமாறு அப்படி புரோமோட் செய்தார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பார்த்திபன் “இரவின் நிழல்” திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “நான் லீனியர் என்றால் என்ன என்று மக்களுக்கு புரியவில்லை. ஆதலால் படத்தின் தொடக்கத்தில் அரை மணி நேரம் மேக்கிங் வீடியோ ஒன்று காட்டப்படும். அதன் பிறகு தான் படம் தொடங்கும்” என கூறியுள்ளார்.
இந்த செய்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “பார்த்திபன் தன்னுடைய தனித்துவத்தை மீண்டும் நிரூபித்து விட்டார்” என பலரும் பாராட்டி வருகின்றனர்.
