CINEMA
“கோட் ஷூட் போடுவேன்டா, ஸ்டைலா கெத்தா”… கேன்ஸில் ரஞ்சித்
இயக்குனர் பா. ரஞ்சித் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மாஸ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் பா. ரஞ்சித் தமிழின் மிக முக்கியமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவரது திரைப்படங்களில் சமூக நீதி சார்ந்த சிந்தனைகள் இழையோடி இருக்கும். இவர் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படம் திரையுலகையே “ஆ” வென பார்க்க வைத்தது.
தன் தரப்பு அரசியலை ஒரு சுவரை குறியீடாக வைத்து அவர் திரைக்கதையில் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் இவருக்கு ஏறுமுகம் தான். ரஜினியை வைத்து இயக்கிய “கபாலி”, “காலா” ஆகிய திரைப்படங்கள் ரஜினிக்கு உரிய மாஸோடு தன் தரப்பு அரசியலையும் சேர்த்து எழுதிய திரைக்கதை வெகுவாக ரசிகர்களை ஈர்த்தது.
மேலும் இத்திரைப்படங்கள் பெரும் அரசியல் சர்ச்சையை உண்டு செய்தது. இதனை தொடர்ந்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தை இயக்கினார். அமேசான் பிரைமில் ரிலீஸான இத்திரைப்படம் வேற லெவல் ஹிட்டானது. தற்போது பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக “ரைட்டர்”, “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”, “பரியேறும் பெருமாள்’ போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் உலக திரைப்பட இயக்குனர்கள் நடிகர்கள் என திரைத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்திய சினிமாவை சேர்ந்த தீபிகா படுகோன், ஏ. ஆர். ரகுமான், மாதவன், கமல்ஹாசன் போன்றோர் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் இயக்குனர் பா. ரஞ்சித் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
கபாலி திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் கோட் ஷூட் போடுவேன்டா, ஸ்டைலா, கெத்தா” என்ற வசனத்திற்கு ஏற்ப பா. ரஞ்சித் கோட் ஷூட்டோடு ஸ்டைலாக மாஸாக காட்சித் தருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் “வேட்டுவம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.