CINEMA
“பஞ்சாங்கத்தை வைத்து ராக்கெட் விட்டார்கள்…” வசமாக சிக்கிய மாதவன்..
மாதவன் பஞ்சாங்கத்தை வைத்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டார்கள் என்று கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்த திரைப்படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இத்திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். அவருடன் இணைந்து சிம்ரன், ஷாருக் கான், சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீயாக இயங்கி வருகிறார் மாதவன்.
இந்நிலையில் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தை குறித்து சமீபத்தில் பேசிய மாதவன், “இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் பஞ்சாங்கத்தை வரைப்படமாக வைத்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை செலுத்தினார்கள்” என கூறினார்.
இதனை நெட்டிசன்கள் தற்போது பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். “பஞ்சாங்கத்தை வைத்து எப்படி ராக்கெட் விடமுடியும்?” எனவும், “பல வருடங்களுக்கு முந்திய கால முறை கணக்கீட்டை கொண்டு எப்படி தற்போது ராக்கெட் விட முடியும்?” எனவும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து “பஞ்சாங்கத்தை வைத்து ராக்கெட் செலுத்த முடியாது” என சமீபத்திய பேட்டியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தை மாதவனுடன் இணைந்து சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிர்ஷா ராய் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தமிழில் வெளியிடுகிறார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
