CINEMA
ஓடிடியில் நயன்தாரா திருமணம்; ரசிகர்கள் குஷி
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வருகிற ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது.
இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி ஆகிய பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். காலை 5.30 மணியில் இருந்து 7.00 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதாவது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இவர்களது திருமணம் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.
இவ்வாறு நேரலையாக ஒளிபரப்பாகும் திருமண நிகழ்ச்சியினை யார் இயக்க போகிறார் தெரியுமா? பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கவுள்ளார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். பல நாடுகள் காதல் புறாக்களாக பறந்து சென்று ஜோடியாக பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
“இப்படியே ஜோடியாக அலைந்து கொண்டிருக்கிறார்களே, எப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்?” என அவரது ரசிகர்கள் கேட்ட வண்ணமே இருந்தனர். ஆனால் அவர்கள் திருமணம் குறித்து வாய் திறக்கவில்லை.
“இப்படியே Live in உறவிலேயே நீடிக்க உள்ளனர் போல” என பேச்சுக்கள் அடிப்பட்டன. எனினும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து இருவரும் மீண்டும் திருமணம் குறித்து மௌனம் காத்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 9 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வந்தது. திருப்பதி கோவிலில் திருமணம் என முடிவானது. ஆனால் சில நாட்களில் திருப்பதியில் திருமணம் இல்லை எனவும் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் என அறிவிப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.