CINEMA
விஜய் சேதுபதிக்கு பதிலாகத் தான் நான் அதை செய்தேன்??.. உண்மையை உடைத்த நாக சைதன்யா
“விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் தான் நான் நடித்தேன்” என நாக சைதன்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள “லால் சிங் சத்தா” திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற 11 ஆம் தேதி வெளிவருகிறது. ஹாலிவுட்டில் வெளியான “ஃபார்ரஸ்ட் கம்ப்” என்ற திரைப்படத்தின் தழுவலான இத்திரைப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார்.
அமீர் கான், கிரண் ராவ், ஜோதி தேஷ்பாண்டே, அஜித் அந்தேரே, ராதிகா சௌத்ரி ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.
“லால் சிங் சத்தா” திரைப்படத்தில் அமீர் கானுடன் கரீனா கபூர், மோனா சிங், நாக சைதன்யா ஆகியோர் நடித்துள்ளனர். நாக சைதன்யா அறிமுகமாகும் பாலிவுட் திரைப்படம் இது. இந்நிலையில் “லால் சிங் சத்தா” திரைப்படத்திற்காக தீவிரமான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளார் நாக சைதன்யா.
கடந்த பல நாட்களாக இத்திரைப்படம் குறித்து பல பேட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு பேட்டியில் நாக சைதன்யா தனது கதாப்பாத்திரம் குறித்தான ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது “லால் சிங் சத்தா திரைப்படத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் என்னுடைய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவருக்கு கால் ஷீட் பிரச்சனை இருந்தது. அதனால் தான் திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின் தான் என்னை அழைத்தனர்” என கூறினார்.
விஜய் சேதுபதி ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடிக்கிறார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
