CINEMA
பெண் ஊழியரிடம் பண மோசடி செய்த நடிகர் பிரசாந்த்… போலீஸில் புகார்
விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரியும் பெண் ஒருவரிடம் நடிகர் பிரசாந்த் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நடிகர் பிரசாந்த் 90களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர். அன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர். நடிப்பு, நடனம், சண்டைப்பயிற்சி என சினிமாவிற்கு தேவையான அனைத்திலும் நூற்றுக்கு நூறு வாங்கிய பிரசாந்த் “செம்பருத்தி”, “எங்க தம்பி”, “ராசா மகன்”, “ஜீனஸ்”, “ஸ்டார்”, “பார்த்தேன் ரசித்தேன்” என தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர்.
ஆனால் சமீப காலமாக அவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது “அந்தகன்” என்ற திரைப்படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவர தயாராக உள்ளது. பிரசாந்த் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசாந்த் மீது ஒரு பண மோசடி புகார் எழுந்துள்ளது. அதாவது ஸ்விட்சர்லாண்டில் விமான நிலையம் ஒன்றில் ஊழியராக பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் புகார் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குமுதினி சென்னை பாண்டி பஜாரில் உள்ள காவல் நிலையத்தில் தன்னிடம் பிரசாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக வாய் வழி புகார் ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினி பொய் குற்றச்சாட்டை வைக்கிறார் எனவும் குமுதினி பிரசாந்த் வீட்டிற்கு வந்து பல முறை பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.