CINEMA
மீரா மிதுன் தலைமறைவு.. போலீஸார் வலை வீச்சு..
நடிகை மீரா மிதுன் தலைமறைவாகியுள்ளதாக காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு.
பட்டியலினத்தவர்களை பற்றி சர்ச்சையான கருத்தை முன்வைத்ததை தொடர்ந்து மீரா மிதுன் மீதும் அவரது நண்பர் ஷாம் மீதும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் ஜாமினில் வெளியே வந்த மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் போலீஸார் மீண்டும் கைது செய்தனர். சில நாட்களில் மீண்டும் ஜாமினில் வெளியே வந்தார்.
கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றபோது மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. ஆதலால் மீரா மிதுன் ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் மீரா மிதுன் வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மீரா மிதுன் தலைமறைவாகி உள்ளதாகவும் அவர் எங்கு இருக்கிறார் என தேடி வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளது நீதிமன்றம்.
நடிகை மீரா மிதுன் 2013 ஆம் ஆண்டு வாக்கில் மாடலிங் உலகில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின் “8 தோட்டாக்கள்” “தானா சேர்ந்த கூட்டம்” “போதை ஏறி புத்தி மாறி” ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். எனினும் “பிக் பாஸ் சீசன் 3” நிகழ்ச்சியின் மூலமாக தான் மீரா மிதுன் பிரபலமாக அறியப்பட்டார்.
