CINEMA
“இங்க என்ன மீட்டிங்கா நடக்குது”… திடீரென கோபமான மனோ பாலா
பிரதாப் போத்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மனோ பாலா திடீரென கோபப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். இச்செய்தி திரை உலகினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
மறைந்த நடிகர் பிரதாப் போத்தனுக்கு அஞ்சலி செலுத்த மனோ பாலா, மணி ரத்னம், சீனு ராமசாமி, கமல் ஹாசன் என திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது இல்லத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் மனோ பாலா பத்திரிக்கையாளர்களிடம் பிரதாப் போத்தன் குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர் “சத்தமாக பேசுங்கள்” என கூற, அதற்கு கோபமடைந்த மனோ பாலா, “இங்க என்ன மீட்டிங்கா நடக்குது, சத்தமா பேசுறதுக்கு” என்று கூறினார். இச்சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பேசிய மனோ பாலா “ஒரு பாசத்திற்குரிய நண்பரை இழந்தது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது” என்று தன்னுடைய சோகத்தை பகிர்ந்து கொண்டார்.
கேரளாவில் பிறந்த பிரதாப் போத்தன் மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன் பல வெற்றித் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். தமிழில் அவர் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை” ,சத்யராஜ் நடித்த “ஜீவா”, கமல் ஹாசன் நடித்த “வெற்றி விழா”, “பிரபு நடித்த “மைடியர் மார்த்தாண்டம்”, சத்யராஜ் நடித்த “மகுடம்”, “ஆத்மா”, “சீவலப்பேரி பாண்டி”, லக்கி மேன்” ஆகிய பல திரைப்படங்கள் தமிழின் முக்கிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.
இவ்வாறு தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் முக்கிய கலைஞராக திகழ்ந்த பிரதாப் போத்தன் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். இச்செய்தி ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்து உள்ளது.
