CINEMA
“ராஜமௌலி இல்லைன்னா பொன்னியின் செல்வன் நடந்திருக்கவே நடந்திருக்காது..” .. மணி ரத்னம் ஓபன் டாக்..
“பொன்னியின் செல்வன்” திரைப்படம் உருவானதற்கு காரணம் ராஜமௌலி தான் என நன்றியோடு கூறியுள்ளார் மணி ரத்னம். ஏன் தெரியுமா?
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “சோழா சோழா” பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த பாடல் அனைவராலும் ரசிக்கும்படியாகயும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று “சோழா சோழா” தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மணி ரத்னம் மேடையில் பேசியபோது “இத்திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் ராஜமௌலி தான். அவருக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “ராஜமௌலி தான் பொன்னியின் செல்வனுக்கான கதவை திறந்து வைத்தார். பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு விதை போட்டது பாகுபலி தான்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.