CINEMA
“கமல் ஹாசன் நடிப்பை பற்றி நான் பேச மாட்டேன்”.. வைரல் ஆகும் மகேஷ் பாபுவின் டிவீட்
“விக்ரம்” திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிப்பை குறித்து மகேஷ் பாபு பகிர்ந்த டிவிட் தற்போது வைரல் ஆகி வருகிறது.
“விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு கலெக்சனை அள்ளிக்கொண்டு வருகிறது. கமல் ஹாசனின் திரைப் பயணத்திலேயே பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆன திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் ஆகிய திரைப்படங்களையும் ஓவர் டேக் செய்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக “விக்ரம்” திரைப்படம் வெளியாகி ஒரு மாத காலம் நெருங்கினாலும் தமிழகத்தின் சிறு நகரங்களில் கூட தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. அந்தளவுக்கு “விக்ரம்” திரைப்படம் மக்களை ஈர்த்து வருகிறது.
அது மட்டும் அல்லாது பல வருடங்கள் கழித்து கமல் ஹாசனுக்கு “விக்ரம்” திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு “விக்ரம்” திரைப்படத்தை பார்த்துவிட்டு அபாரமாக பாராட்டி சில டிவிட்டுகளை பகிர்ந்துள்ளார்.
அதில் “விக்ரம் பிளாக் பஸ்டர் சினிமா. லோகேஷ் கனகராஜை நான் நேரில் சந்தித்து விக்ரம் திரைப்படம் குறித்து பேச வேண்டும்” என கூறி பாராட்டியுள்ளார்.
மேலும் “விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் நடிப்பு அபாரம். அனிருத்தின் இசை பெஸ்ட். இந்த ஆல்பம் என்றைக்கும் என்னுடைய டாப் லிஸ்டில் இருக்கும்” என பாராட்டியுள்ளார்.
அடுத்ததாக “கமல் ஹாசனின் நடிப்பை பற்றி கூற எனக்கு தகுதி இல்லை. உங்களது மிகப் பெரிய ரசிகனாக நான் பெருமைக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.