CINEMA
பாலிவுட்டுக்கு போகும் மாரி இயக்குனர்..வெளியானது புதிய படத்தின் போஸ்டர்..
மாரி திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் தனது அடுத்த திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
“காதலில் சொதப்புவது எப்படி?” என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் பாலாஜி மோகன். இத்திரைப்படத்தை தொடர்ந்து வித்தியாசமான படைப்பான “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அதன் பிறகு நடிகர் தனுஷை வைத்து இயக்கிய “மாரி” என்ற திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. அனிரூத் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. காஜல் அகர்வால் கல்ர் ஃபுல்லாக காட்சித் தந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
இதனை தொடர்ந்து “அஸ் ஐயம் சஃபரிங்க் ஃப்ரம் காதல்” என்ற வெப் சீரியஸை இயற்றினார். பின்பு மீண்டும் தனுஷுடன் கைகோர்த்து இயக்கிய “மாரி 2” தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. குறிப்பாக அத்திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான “ரவுடி பேபி” என்ற பாடல் உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
மேலும் பாலாஜி மோகன் “வேலையில்லா பட்டதாரி 2”, “வினோதய சித்தம்” ஆகிய திரைப்பங்களில் நடித்தும் உள்ளர். அதே போல் யோகி பாபு கதாநாயகனாக நடித்து ஹிட் ஆன “மண்டேலா” திரைப்படத்தையும் தயாரித்து உள்ளார்.
இவ்வாறு சினிமாத்துறையில் பல்வேறு பரிமாணங்களில் களமாடும் பாலாஜி மோகன், பாலிவுட்டில் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு “கிளிக் ஷங்கர்” என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்க்லி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தின் வெளியீடு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இதற்கு முன் “காதலில் சொதப்புவது எப்படி?” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் “வாயை மூடி பேசவும்” திரைப்படத்தின் மலையாள ரீமேக்கையும் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி மோகன் ஹிந்தியில் படம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.