CINEMA
“மணி ரத்னம் உண்மையை மறைக்கிறார்… “.. பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த வினை..
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் மணி ரத்னம் வரலாற்று சம்பந்தமாக பல உண்மைகளை மறைக்கிறார் என வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது.
இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூட்யூப்பில் பத்து மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தில் சீயான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.
இதில் சீயான் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் வருகிறார். த்ரிஷா இளவரசி குந்தவையாகவும் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும் கார்த்தி வந்திய தேவனாகவும் வருகின்றனர்.
மேலும் பிரகாஷ் ராஜ் சுந்தர சோழனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும் வருகின்றனர். இவ்வாறு ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
வரலாற்றுப்படி சோழர்கள் சைவ மரபை சேர்ந்தவர்கள். ஆனால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் நெற்றியில் நாமத்துடன் தென்படுகிறார். இது குறித்து இணையத்தில் கூட கடும் விவாதங்கள் நடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் “சோழர் வம்சத்தில் நாமம் இடும் பழக்கமே இல்லை. ஆனால் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரம் நெற்றியில் நாமம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் “திரைப்படத்தை வெளியிடும் முன் எங்களுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும், அதில் வரலாறு மறைக்கப்பட்டிருந்தால் விஸ்வரூபம் எடுப்போம்” எனவும் கூறியுள்ளார்.