CINEMA
கனல் கண்ணன் விடுதலை.. இந்துகளுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி என ஓங்காரம்
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் விடுதலையானதை தொடர்ந்து இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளாராம்.
சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்து வரும் கனல் கண்ணன் இந்து முன்னணி அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதனிடயே சமீபத்தில் சென்னை மதுரவாயிலில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் “ஸ்ரீரங்கம் கோயிலில் பல லட்சம் இந்துக்கள் தரிசனம் செய்கிறார்கள். அவர்கள் வெளியே வரும்போது பெரியார் சிலை இருக்கிறது. என்றைக்கு அந்த சிலை உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என பேசினார்.
கனல் கண்ணனின் இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பின் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்க முயலுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கனல் கண்ணன் தலைமறைவாகியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி புதுச்சேரியில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனிடையே கனல் கண்ணனின் முன் ஜாமீனை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதனை தொடர்ந்து கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் “இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி” எனவும் பேசியுள்ளாராம்.
