CINEMA
பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என கூறிய ஸ்டண்ட் மாஸ்டர் கைது..
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்து வருபவர் கனல் கண்ணன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார். மேலும் பல பிரபல ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
கனல் கண்ணன் தமிழ் மொழியில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கெல்லாம் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்திருக்கிறார்.
கனல் கண்ணன் தற்போது இந்து முன்னணி அமைப்பின் கலை மற்றும் பண்பாட்டுப் பிரிவின் தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதனிடயே சமீபத்தில் சென்னை மதுரவாயிலில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் “ஸ்ரீரங்கம் கோயிலில் பல லட்சம் இந்துக்கள் தரிசனம் செய்கிறார்கள். அவர்கள் வெளியே வரும்போது பெரியார் சிலை இருக்கிறது. என்றைக்கு அந்த சிலை உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என பேசினார்.
கனல் கண்ணனின் இந்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பின் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் வன்முறையை தூண்டுதல், பொது ஜனத்திற்கு அச்சுறுத்தலை உண்டு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கனல் கண்ணன் தலைமறைவாகியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
