CINEMA
திருமூர்த்திக்கு ஒளி தந்த கமல் ஹாசன்… என்ன மனுசன்யா??
பாடகர் திருமூர்த்திக்கு கமல் ஹாசன் செய்த பெரிய உதவி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நொச்சிப்பட்டி திருமூர்த்தி என்று அழைக்கப்படும் திருமூர்த்தி ஒரு வைரல் பாடகராக திகழ்பவர். இவர் பாடும் பாடல்கள் பரவலாக வைரல் ஆகி வருபவை.
பார்வையற்றவரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் “விஸ்வாசம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே” பாடலை பாடி இணையத்தில் வைரல் ஆனார். அவர் பாடிய வீடியோ வேற லெவலில் ரீச் ஆன நிலையில் “விஸ்வாசம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி. இமான், திருமூர்த்திக்கு தன்னுடைய இசையில் பாட ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதன்படி 2019 ஆம் ஆண்டு வெளியான “சீறு” திரைப்படத்தில் “செவ்வந்தியே” என்ற பாடலை பாட டி. இமான் திருமூர்த்திக்கு வாய்ப்பு தந்தார். அப்பாடல் கேட்பவர்களின் மனதை உருகவைப்பதாக இருந்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் கமல் ஹாசன் எழுதி பாடிய “பத்தல பத்தல” பாடலை திருமூர்த்தி பாடி வீடியோவாக வெளியிட்டிருந்தார். கமல் பாடியது போலவே ஏற்ற இறக்கங்களுடன் மிகவும் அருமையாக பாடியிருந்தார்.
இதனை பார்த்த கமல், நேற்று திருமூர்த்தியை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து திருமூர்த்தியை கமல் சந்தித்தார். அப்போது “உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” என தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினார் திருமூர்த்தி.
அதன் பின் கமல் முன்பே கையில் ஒரு வாளியை வைத்து தாளம் போட்டவாறே “பத்தல பத்தல” பாடலை கமல் போலவே திருமூர்த்தி பாடிக்காட்டினார். இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த கமல் “இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானிடம் பேசி KM Music Conservatory என்ற இசைப்பள்ளியில் உங்களை சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்கிறேன்” என உறுதி அளித்தார்.
அதே போல் ஏ. ஆர். ரகுமானும் சேர்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளாராம். மேலும் இசைப்பள்ளியில் படிப்பு செலவுகள் அனைத்தும் கமலே பார்த்துக் கொள்ளுவதாகவும் திருமூர்த்திக்கு உறுதி அளித்தார். திருமூர்த்தி கமல் ஹாசனுக்கு மனதார தனது நன்றிகளை தெரிவித்தார். இச்செய்தி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.