CINEMA
“அன்றே ஓடிடி வரும் என சொன்னேன்”.. கர்ஜித்த கமல்
“விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ருசிகரமாக பல விஷயங்களை பேசினார் கமல் ஹாசன்.
“விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சில நேரங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அப்போது பேசிய அவர் “நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என தெரிந்ததுமே டி. ராஜேந்திரன் என் சட்டை நனைய என்னை கட்டிப் பிடித்து அழுதார்” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “ஹிந்தி ஒழிக என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது. தமிழ் வாழ்க என்று சொல்வோம்’ என கூறிய போது ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பினர்.
அதை தொடர்ந்து மேலும் பேசிய அவர் “ஓடிடி என்ற ஒரு சினிமா விநியோகத் தளம் முன்பே வரும் என சொன்னவன் நான்” என கூறிய போது அரங்கமே அதிர்ந்தது.
கமல் ஹாசனின் நடிப்பில் உருவாகி பல வருடங்களுக்கு முன் வெளியான “விஸ்வரூபம்” திரைப்படத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். அத்திரைப்படத்தை தான் “Dish” மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தொலைக்காட்சி வழியாக மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யவிருப்பதாக கூறினார். அப்போது சினிமா துறையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
“இப்படி எல்லாம் செய்தால், திரையரங்கத்திற்கு யாரும் வரமாட்டார்கள், சினிமா துறையே அழிந்து போகும்” என விமர்சித்தனர். அதை எல்லாம் குறிப்பிட்டு தான் தற்போது “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக ஓடிடி வழியாகவே பல திரைப்படங்கள் வெளிவருகின்றன. எப்போதும் தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்கும் கமல் ஹாசன் “ஓடிடி” குறித்தும் சிந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.